“தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது” – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!

தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது என அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று(ஜூன்.11) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “தேமுதிக தனித்து போட்டியிடுமா என்று கேட்கிறீர்கள், தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட முடியும் என்பதை நிரூபித்தவர் விஜயகாந்த். இப்போது தனித்து போட்டியா என்று கேட்டால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால், அதற்கு தேமுதிக பயப்படாது. 234 தொகுதிகளிலும் எங்களுடைய நிர்வாகிகளை வைத்து கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் கூட்டணி குறித்து உடனே சொல்ல முடியாது.

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவ, மாணவியர் தோழில் கை போடுவதாக சொல்கிறார்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் சின்ன சின்ன காரியத்தை எதிர்மறையாக பார்த்தால் அப்படித்தான் தெரியும். அதை நேர்மறையாக யோசித்துப் பாருங்கள். அதை அன்பாக தட்டிக்கொடுக்கிறார் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். வேல் முருகன் கருத்து அவருடையது. அதில் கருத்து சொல்ல முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.