கர்நாடகா கோலார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்ததால் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ். ஜி. நாராயணசாமி மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கர்நாடகா மாவட்டம் கோலார் பகுதியில் உள்ள எஸ். என். ஆர். அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க 26ஆம் தேதி இரவு 11 மணிக்கு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் கே. சுதாகர் சென்றிருந்தார்.
மருத்துவமனையில் இருக்கும் வசதிகள் குறித்து விசாரித்ததோடு கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வெண்டிலேட்டர்கள் ஒதுக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் கோரிக்கைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் டாக்டர். கே.சுதாகரிடம் தனது உறவினருக்கு வெண்ட்டிலேட்டர் தேவைப்படுகிறது என முறையிட்டார். அந்நேரம் வெண்டிலேட்டர்கள் சில செயலிழந்த நிலையில் இருப்பதைப் பார்த்த அவர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ். ஜி. நாராயணசாமி மற்றும் மருத்துவ அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மாவட்ட நிர்வாகத்திடம் தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். மேலும் அவசரக் காலகட்டத்தில் உதவிக்குத் தன்னை தொடர்புகொள்ளவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







