19 மாநிலங்களுக்கு போதை மாத்திரைகள் விநியோகம் – ஹரியானாவில் இருவரை கைது செய்தது தமிழக காவல்துறை!

ஹரியானாவில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு போதை மாத்திரைகளைச் சட்டவிரோதமாக விநியோகித்த நெட்வொர்க்கை சேர்ந்த இருவரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் டேபென்டடால் (Tapentadol) மாத்திரைகள் சட்டவிரோதமாக அனுப்பப்படுவதாகக் கிடைத்த உளவுத்தகவல்களின் அடிப்படையில், தென்மண்டல காவல்துறை கடந்த ஜூலை மாதம் ‘ஆபரேஷன் டீப் சோர்ஸ்’ (Operation Deep Source) என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் சந்தேகத்திற்குரிய பார்சல்களைக் கண்டறிய அஞ்சல்துறை மற்றும் தனியார் கொரியர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தேனி மாவட்டம் கண்டமனூரில் சந்தேகத்திற்குரிய அஞ்சல் பார்சல் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் டேபென்டடால் மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் தென்கரை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பார்சல்களை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் ஹரியானா மாநிலம் அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

அம்பாலாவில் உள்ள அஞ்சல் மற்றும் கூரியர் வாடிக்கையாளர் கணக்குகளை ஆய்வு செய்ததில், கடந்த ஓராண்டில் மட்டும் 588 சந்தேகத்திற்குரிய பார்சல்கள் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இவற்றில் 11 பார்சல்கள் தமிழகத்திற்கு அனுப்பப்படுவதற்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநிலம் அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வந்த மகேந்தர் சிங் பிஷ்ட், பார்சல்களை அனுப்புவதில் முக்கிய புள்ளியாக செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சுனில் குமார் என்பவர் தமிழகத்திற்கு மாத்திரைகளை விநியோகிக்க உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் தங்களது அடையாளங்களை மறைப்பதற்காக ஆதிஷ் பரத்வாஜ், அஜீஸ் பரத்வாஜ், ஆஷிஷ் பரத்வாஜ் உள்ளிட்ட போலிப் பெயர்களையும், தவறான அனுப்புநர் முகவரிகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

ஹரியானா சென்ற தமிழக காவல்துறையின் சிறப்புக் குழுவினர், நவம்பர் 2ம் தேதி மகேந்தர் சிங் பிஷ்ட் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரையும் அம்பாலாவில் கைது செய்தனர். பின்னர் அம்பாலா நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இருவரும் தமிழகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தகவல் தொடர்புகள் குறித்து காவல்துறை தற்போது விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற நபர்கள், சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் பயனடைந்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள முக்கிய புள்ளிகளையும் கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.