திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவு விடுதி ஒன்றில்
தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் வழங்காததால் கடைப் பணியாளர்களுக்கும், உணவு அருந்த வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள பிரதான
நெடுஞ்சாலையில் கசாலி என்ற உணவு விடுதி உள்ளது. இந்தக் கடைக்கு உணவு மணிகண்டன், சிவபெருமாள் என்ற இருவர் உணவருந்த வந்துள்ளனர். அப்போது,
தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் கொடுக்குமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடை ஊழியர்கள் அரை என்ற அளவில் தந்தூரி சிக்கன் வாங்கினால் மட்டுமே அதற்கு மயோனைஸ் தரப்படும்
என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் தராத நிலையில் கடை ஊழியர்களுக்கும், உணவருந்த வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சிவபெருமாள், மணிகண்டன் இருவரும் கடை ஊழியரை
தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் கையில் கிடைத்தவைகளைக் கொண்டு தாக்கிக் கொள்ளும் காட்சிகள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் தராததால் ஏற்பட்ட மோதல் உணவு விடுதியைப் போர்க்களமாக மாற்றியுள்ளது. தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா









