சிக்கன் பக்கோடா சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-கனகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு நித்திஷ் (வயது 11), ஜீவன்…

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-கனகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு நித்திஷ் (வயது 11), ஜீவன் (வயது 7) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தொழுதாவூர் கிராமத்தில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேசன் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது, சின்னம்மா பேட்டை டாஸ்மார்க் கடை அருகே உள்ள சிக்கன் பக்கோடா சென்டரில் குழந்தைகளுக்கு சிக்கன் கோழிக்கால்களை வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்த வெங்கடேசனிடமிருந்து குழந்தைகள் நித்திஷ், ஜீவன் ஆகியோர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் குழந்தைகளை உடனடியாக திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தைகளை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிக்கன் சென்டரில் கோழிக்கால்களை வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலங்களாக துரிதவகை உணவுகளை வாங்கி உட்கொள்வதால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அண்மையில் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழப்புகளும், உடல்நலக்குறைபாடுகளும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு வகைகளில் பெற்றோர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.