2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 5 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் வெள்ளேரி உள்ளது. இந்த வெள்ளேரி தொண்டமாநத்தம்,  ராமநாதபுரம்,  பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களையொட்டி அமைந்துள்ள…

புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 5 உறை
கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் வெள்ளேரி உள்ளது.
இந்த வெள்ளேரி தொண்டமாநத்தம்,  ராமநாதபுரம்,  பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட
கிராமங்களையொட்டி அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியாகும்.  இந்த ஏரியில் வெள்ளை
நிறத்தில் மணல்கள் இருப்பதால் இதற்கு வெள்ளேரி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வெள்ளேரி ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த சில
நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் ஒரு இடத்தில் உறை கிணறு  ஒன்று தென்பட்டுள்ளது.

இதனை கண்ட தொண்டமாநத்தம் பகுதி இளைஞர்கள் இது குறித்து காவல்துறை மூலம் அகழ்வாராய்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  அங்கு வந்த அகழ்வாராய்ச்சி பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுக்கள் மூன்றடுக்கு கொண்ட உறை கிணற்றை வெளியே எடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  இதனிடையே தற்போது இதேபோன்று 5 உறை கிணறுகள் வெள்ளேரியில் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும்,  மக்கள் குடிநீருக்காக இதுபோன்ற உறைநீர் கிணற்றை பயன்படுத்தி உள்ளதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.