அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற விவகாரத்தில் அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த தலைமை ஆசிரியர் தமிழரசி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் மகா விஷ்ணு என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார். அப்போது இப்படி மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். அதற்கு அந்த சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று காலை அந்த பள்ளியின் முன் கூடி மூடநம்பிக்கையை வளர்க்கும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : NLUDelhi | கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட சென்னை மாணவி | நடந்தது என்ன?
இந்நிலையில், சென்னை அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னை மாவட்ட அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.







