இயக்குநர் வெற்றிமாறனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு

ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள்…

ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது, இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும் என்று பேசினார்.

இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன.

அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செய்கின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.