அவதார் 2 ஆம் பாகத்தின் புதிய அப்டேட்!

அவதார் 2 படத்தை உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் இருந்து இந்தப் படத்தின் டீசர், டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல்…

அவதார் 2 படத்தை உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் இருந்து இந்தப் படத்தின் டீசர், டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட படம் அவதார். ரூ.1,500 கோடி பட்ஜெட், 3 டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருதும் கிடைந்திருந்தது. இதையடுத்து, அவதார் 2 படத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கின. 2014-ம் ஆண்டே அவதார் 2 வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தை வெளியிடும் தேதி தள்ளிப் போய் கொண்டே இருந்தது.

தற்போது அவதார் 2 படத்தை இந்தாண்டுக்குள் வெளியிடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உருவாகி வரும் அவதார் 2 படத்தை உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் இருந்து இந்தப் படத்தின் டீசர், டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு என்ன டைட்டில் வைக்கப் போகின்றனர் என்பது மற்றொரு மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில், படத்துக்கு “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” (Avatar: The Way of Water) என்று பெயரிட்டுள்ளனர். இதனிடையே, படத்தின் பிரமிக்க வைக்கும் டிரைலர் காட்சிகளை, “சினிமாகான் 2022” என்ற நிகழ்ச்சியில் (CinemaCon 2022) திரையிட்டனர். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஜேக் சுல்லி, நெய்திரி உள்ளிட்டோர் கடலுக்கு அடியில் நீந்துவது, வானத்தில் பறப்பது போன்ற காட்சிகளை 3டி தொழில்நுட்பம் மூலம் கண்டு ரசித்தனர்.

படத்தின் புகைப்படங்களும் வெளியாகி சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், “அவதார் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் தொழில்நுட்பத்தில் ஏராளமான முன்னேற்றங்களை காணலாம். ஒரு சினிமாவால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அந்த வரம்புகளை எல்லாம் இது நிச்சயம் தாண்டிவிடும். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன.” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் கூறுகையில்,” உலகம் முழுதையும் தொடர்புப்படுத்தக் கூடிய விஷயங்களை கதையில் கொண்டு வருவதுதான் கேமரூனின் பலம். அந்த மேஜிக்கை இந்த முறையும் செய்திருக்கிறார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.