சென்னை தவிர மாநிலம் முழுவதும் 10 இடங்களில் பொறியியல் கலந்தாய்வை நேரடியாக நடத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. அப்போது, கேள்வி பதில் நேரத்தில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வை நேரடியாக நடத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார்.
இதுவரை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், வரும் கல்வியாண்டில் ( 2022-2023 ) நேரடியாக கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும், மேலும் சென்னை தவிர மாநிலம் முழுவதும் 10 இடங்களில் பொறியியல் கலந்தாய்வை நேரடியாக நடத்துவது பற்றியும் தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.
கடந்த காலங்களில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற்ற போது பல்வேறு குளறுபடிகள் நிலவியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் பொன்முடி, விரைவில் பொறியியல் கலந்தாய்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
– சத்யா விஸ்வநாதன்







