இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (5 ரன்கள்), இஷான் கிஷன் (27 ரன்கள்) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரேயஸ் ஐயர், கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். முக்கியமான ஆட்டமான இதில், இந்திய அணி இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததை அடுத்து, ரசிகர்கள் சோகத்தின் ஆழ்ந்தனர்.
அப்போது ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹார்திக் பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அக்ஸர் படேல் 8 ரன்களும், ஹர்ஷல் படேல் 1 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது இந்தியா.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. 9 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில், முதல் இரண்டு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஒருவேளை இந்தியா வென்றால், கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
-மணிகண்டன்