அம்பத்தூரில் நடைபயிற்சிக்கு சென்ற நபர் மீது லாரி ஏறி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் ஜீவரத்தினம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வினோத். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வீட்டில் தேநீர் அருந்திவிட்டு மாலை நேரத்தில் வீட்டின் அருகாமையில் உள்ள சாலையில் நடைபயிற்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர், இன்று மாலை வழக்கம்போல் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த சாலையில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றிற்கு இரும்பு பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக கனரக லாரி வந்துள்ளது. பொருட்களை ஏற்றிக்கொண்டு பின்னோக்கி வந்த லாரி நடைபயிற்சிக்கு சென்றுகொண்டிருந்த வினோத் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
லாரி மோதி வினோத் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், இடுப்புப்பகுதியில் வாகனத்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதையறிந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







