திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி சந்தையில் கொய்யா பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் கொய்யா விலை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆய்க்குடியில் கொய்யா சந்தை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான ஆயக்குடி, சட்டப்பாறை, வரதப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்படும் கொய்யா பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இச்சந்தையில் நாள்தோறும் சுமார் 200டன் அளவில் கொய்யா பழங்கள் விற்பனையாகின்றன. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் பருவ நிலை மாற்றம், வெயில் தாக்கம், புழு தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் கொய்யா பழம் வரத்தில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
தினந்தோறும் 200 டன் அளவில் புழக்கத்தில் இருந்த கொய்யா பழங்கள் தற்போது 2 முதல் 3 டன் அளவிலேயே உள்ளது. இதனால் கொய்யா பழத்திற்கு கடும் கிராக்கி உருவாகி உள்ளது. 22 கிலோ கொய்யா பழங்களை உடைய ஒரு பெட்டி ரூ.1800 வரையில் விற்பனையாகிறது. விலை அதிகமாயினும் கொய்யா பழங்களை வாங்குவதில் வியாபாரிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
வேந்தன்







