தமிழ் சினிமாவில் வட சென்னையை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் வட சென்னையில் உள்ள இரண்டு ரவுடிகளுக்கு இடையேயான சண்டையை மையமாக வைத்து டைனோசர்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்.
வட சென்னையில் சாலையார் மற்றும் கிளியப்பன் கும்பலுக்கும் இடையே பகை. இதனால் கிளியப்பன் மச்சானை தனது அடியாட்களை வைத்து சாலையார் போட்டுத்தள்ளுகிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்பட மச்சானை கொலை செய்த 8பேரையும் சரணடைய செய்கிறார். இதில் ஒருவனுக்கு தற்போதுதான் திருமணம் ஆகியுள்ளது என்பதால் அவனுக்கு பதிலாக அவனது நண்பன் சிறைக்கு செல்கிறான். இதனால் சமாதானம் அடைந்த கிளியப்பன் வீட்டிற்கு பணம் வாங்க சாலையார் கும்பலில் இருந்து ஆட்கள் செல்கிறார்கள் அவர்களுடன் கொலையாளியும் செல்கிறான். அங்கு கொலை செய்தது இவன்தான் என கிளியப்பனுக்கு தெரியவருகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படம்.
இப்படத்தில் உதய் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். மாறா, அட்டு படத்தில் நடித்த ரிஷி,
சாய் பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும்பாலும் புதுமுகங்கள் தான் என்றாலும் நன்றாக நடித்துள்ளனர். உதய் கார்த்திக் வட சென்னை இளைஞனாக நடித்துள்ளார். இவரும் ரிஷியும் அண்ணன் தம்பிகள். ரிஷியின் நண்பனாக மாறா. சாலையாராக நடித்துள்ள மானெக்ஷா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வட சென்னை ரவுடியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அவரது குரலும் கண்களும் பலம். மற்றபடி நடித்த மற்றவர்களும் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.
வட சென்னை வாழ் மக்களின் பேச்சும் அவர்களது வாழ்க்கை முறையும் இப்படத்திலும் அப்படியே காட்டப்பட்டுள்ளது. சண்டையை விரும்பாத நபராக உதய்கார்த்திக் ஒருகட்டத்தில் கத்தியை எடுக்க வேண்டிய சூழல் வருகிறது ஆனாலும் அதனை எப்படி சாதுர்யமாக கையாண்டார் என்றும் கத்தியை எடுத்து தான் பழி வாங்க வேண்டும் என்றில்லை மாற்று வழியுண்டு என இப்படத்தில் சொல்லியுள்ளனர். இயக்குனர் மாதவன் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் நல்ல படமாகவே வந்து இருக்கும். ஒரு காட்சியை ஆரம்பித்து முடிக்க தெரியாமல் திணறியுள்ளார். நாயகியாக சாய் பிரியா சில காட்சிகளில் வந்து போகிறார் அவ்வளவே. போபோ சசி இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை பரவாயில்லை. ஜோன்ஸ் வி ஆனந்தின் கேமரா வொர்க் நன்று. வட சென்னை பகுதிகளை அப்படியே காட்டியுள்ளார்.
மொத்தத்தில் டைனோசர்ஸ் – முயற்சி.
ரேட்டிங் 3/5
-சுஷ்மா சுரேஷ்







