டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமான சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியதாக அமெரிக்க கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளாா்.
1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஏப்ரல் 14-ம் தேதி இரவில் எதிர்பாராதவிதமாக பனிப்பாறையின் மேல் அந்த கப்பல் மோதியது. மூழ்க வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட அந்த கப்பல், 3 மணி நேரத்தில் நீரில் முழுவதுமாக மூழ்கியது.
இந்த கோர விபத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 1500 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 110 ஆண்டுகள் ஆனாலும் கப்பல் பயண வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கிடந்தது 1985ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆனால் கடும் சேதம் அடைந்ததால் டைட்டானிக் கப்பலை கடலுக்கு மேலே இழுத்து வர முடியவில்லை.
அதனால் டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்கு சென்று ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்புக்காக திரைத்துறையினரும் சென்று வருகின்றனர். இந்நிலையில், டைட்டானிக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்வையிட அழைத்து செல்லும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்தது. டைட்டன் நீா்மூழ்கி என அழைக்கப்படும் அதில் 5 பேர் பயணிக்க முடியும்.
இந்நிலையில், டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண்பதற்காக கடந்த 19ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கி மூலம் 5 பேர் ஆழ்கடல் சுற்றுலா சென்றனர். அதில் மூன்று சுற்றுலா பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி என மொத்தம் 5 பேர் இருந்தனர். கனடாவின் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து பயணத்தை தொடங்கிய சுமார் இரண்டு மணி நேரத்திலேயே நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அதையடுத்து, 4 நாள்களாக நடைபெற்ற தேடுதல் பணிகளுக்குப் பிறகு அந்த நீா்மூழ்கி கடலுக்குள் வெடித்துச் சிதறி, டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமாா் 1600 அடி தொலைவிலுள்ள கடல் படுகையில் சிதறிக் கிடப்பதை ரிமோட் நீா்மூழ்கி சாதனம் (ஆா்ஓவி) மூலம் மீட்புக் குழு கடந்த வியாழக்கிழமை கண்டறிந்தது.
அதையடுத்து, டைட்டன் நீா்மூழ்கியிலிருந்த ஐந்து பேரும் உயிரிழந்தாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்தது. இந்த நிலையில், டைட்டானிக் நீர்மூழ்கி கடலுக்குள் மாயமான சிறிது நேரத்திலேயே அந்த நீா்மூழ்கி வெடித்து சிதறிய சப்தத்தை தங்களது ஒலி உணா்வு கருவிகள் பதிவு செய்ததாக அமெரிக்க கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளாா்.
டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டன் நீர்மூழ்கியின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ள அமெரிக்க கடலோரப் படை, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.







