முதல்வர் 3 நாட்கள் பேப்பர் படித்தாரா? – பரந்தாமன் கேள்வி!

தவெகவின் 6 மாதகால ஆட்சி குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போலத்தான் உள்ளது என பரந்தாமன் விமர்சித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“ஆறு மாத கால தவெக ஆட்சிக்கு, தீபாவளி அன்று நடந்த குற்ற நிகழ்வுகளே சாட்சி. தல தீபாவளியைக் கொண்டாடிவிட்டு, முதலமைச்சர் விஜய் இப்போதுதான் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியிடம் ஆலோசனை மேற்கொள்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் தீபாவளியைத் தல தீபாவளி என்றேன். உடனே விர்ச்சுவல் வாரியர்ஸ் கிளம்பி வந்துவிடாதீர்கள்.

பண்டிகை நாட்களில் கொலை நடப்பது புதிதல்ல என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தெரிவித்தது குறித்து தற்போது காணொளி வெளியிடப்பட்டு வருகிறது. 6 மாதத்தில் சட்டம்-ஒழுங்கைத் தூக்கி நிறுத்திடுவோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

இப்போது வரை 17 கொலைகள் நடந்துள்ளன. முதல்வர் 3 நாட்கள் பேப்பர் படித்தாரா? ‘ஒரு விரல் புரட்சி’ படத்தில் உருட்டுக்கட்டை புரட்சி உங்கள் ஆட்சியில்! ‘கத்தி’ படத்தில் தண்ணீருக்காக வாய்கிழியப் பேசி சண்டை போட்டீர்கள். ஆனால், துணை சபாநாயகர் வீட்டிற்குத் தண்ணீர் கேட்டு வந்த ஒருவருக்குத் தண்ணீர் காட்டிவிட்டீர்கள்.

தொடர்புகொள்ள முடியாத நிலை

சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் அதிகாரிகள் முதல்வரிடம் உத்தரவு பெறுவதற்கு அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. மாலை 5 மணிக்கு மேல் முதல்வர் காணாமல் போனால் அதிகாரிகள் என்ன செய்வார்கள்? அரசியல் தொடர்பான கைதுகளைச் செய்ய மட்டும் முதல்வர் பாய்ந்து உத்தரவு போடுகிறார். பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவு போடவில்லை என்பது அதிகாரிகளுக்கும் தெரியும்.

குற்ற நிகழ்வுகள் குறித்து முதல்வர் விஜய் பேசும்போது தனிமனித ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், திமுக ஆட்சியில் இருந்தபோது தனிமனித ஒழுக்கம் என்று சொல்லவில்லை. அவருக்குத் தனிமனித ஒழுக்கம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? எல்லோரும் கல்யாணத்துக்கு குடும்பத்தோடு வந்து வாழ்த்துவோம் என்று சொல்வார்கள்… இதுக்கு மேல நான் பேசல.

சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்

துணை சபாநாயகர், தன்னைச் சந்திக்க வந்த சாதாரண மனிதரை அடிக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐஏஎஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இதற்கு முழுப் பொறுப்பு முதலமைச்சர் விஜய்தான். இந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும்.

முதல்வர் நிதானமாக உள்ளாரா?

உங்கள் முதலமைச்சருக்கு ஆட்சி செய்ய ஆளுமை உள்ளதா? 6 மாதத்தில் இந்த ஆட்சி எப்படி உள்ளது என்று சொல்ல வேண்டும் என்றால், குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போலத்தான் உள்ளது. பகிரங்கமாகக் கேட்கிறேன், முதல்வர் நிதானமாக உள்ளாரா? சுய ஒழுக்கம் வேண்டும். ‘போக்கிரி’யில் ஹீரோவாக இருந்தீர்கள். இது ஒரு போக்கற்ற ஆட்சியாக உள்ளது. ‘பிகில்’ படத்தில் நடித்தார். பிகில் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மூன்று நாட்களாக என்ன செய்தீர்கள்? ஓடி ஒளிந்துவிட்டாரா முதல்வர்?”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.