மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வை ஏற்படுத்தியதா ஆகஸ்ட் 16, 1947?

ஏ.ஆர் முருகதாசின் உதவி இயக்குநர் என்.எஸ் பொன்குமார் இயக்கியுள்ள படம், ஆகஸ்ட் 16, 1947. இந்த திரைப்படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். அவருடன் விஜய் டிவி புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ரேவதி உள்ளிட்ட…

ஏ.ஆர் முருகதாசின் உதவி இயக்குநர் என்.எஸ் பொன்குமார் இயக்கியுள்ள படம், ஆகஸ்ட் 16, 1947. இந்த திரைப்படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். அவருடன் விஜய் டிவி புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947ஆம் ஆண்டில், செங்காடு எனும் கிராமத்தில் வாழும் மக்களை அடிமை போல் வேலை வாங்கும் ராபர்ட் க்ளைவ் என்ற ஆங்கிலேயருக்கும், அவ்வூர் மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் ஆகஸ்ட் 16, 1947.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்து வந்த காலத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சில தினங்கள் முன்பு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை. வெளி உலக தொடர்பு இல்லாத செங்காடு என்னும் கிராமத்தில் வாழும் மக்களை பருத்திகாக ராபர்ட் கிளைவ் என்னும் ஆங்கிலேயன் மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்து வருகிறான். சின்ன சின்ன அடிப்படை தேவைகளை கேட்டால் கூட மிகப்பெரிய அளவுக்கு அவர்களுக்கு தண்டனை கொடுப்பான். இவன் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம்
ராபர்ட் கிளைவ் மகன் ஜஸ்டின் தன் நினைக்கும் பெண்களை எல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருகிறான். இப்படிப்பட்ட சூழலில் திடீரென ராபர்ட் கிளைவ் மகன் ஜஸ்டின் கொலை செய்யப்படுகிறான். அந்த கொலைக்கான காரணம் என்ன? அந்த ஊர் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததா? இல்லையா? என்பது தான் ஆகஸ்ட் 16, 1947 திரைப்படத்தின் கதை.

பத்து தல படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் நடித்த ஆகஸ்ட் 16, 1947 வெளியானதால் ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பத்து தல படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கௌதம் கார்த்திக் இந்த படத்தில் மேலும் சிறப்பாக நடித்துள்ளார். காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் தன்னால் முடிந்த அளவுக்கு எஃபெக்ட் எடுத்து நடித்துள்ளார். அவரின் மெனக்கெடலுக்கும் உழைப்புக்கும் இந்த படம் ஒரு சிறந்த படமாக அவருக்கு வெற்றியை தேடி தரும்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து வந்த புகழ் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இந்த படத்தில் நகைச்சுவை செய்யாமல் நடித்துள்ளார் என்பது தான் முக்கியமான விஷயம். படத்தில் இறுதியில் சில காட்சிகளில் அவரது நடிப்பு நம்மை பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நடிகர் புகழ்.

இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒரு பிளஸ் என்றால் அது இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ரிச்சர்ட் ஆஷ்டன் தான். தொடக்கம் முதல் இறுதி வரை அவரது நடிப்பு நம்மை பயமுறுத்துகிறது. அதிலும் ஊர் மக்களுக்கு அவர் செய்யும் கொடுமைகளை பார்க்கும் போது நமக்கே சுதந்திர தாகம் வந்து அவரை அடிக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு ஒரு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த படத்திற்கு இன்னொரு பிளஸ் என்றால் அது அந்த பகுதி மக்கள் பேசும் மொழியும் அவர்களது உடையும் என்று சொல்லலாம் இயக்குநர் பொன்குமார் அதை கச்சிதமாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளார். அதே போல வரலாற்று கதைகளை திரைப்படமாக எடுப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அது அந்த காலத்து மக்கள், அவர்கள் வாழ்ந்த இடம், மொழி, வார்த்தைகள், உடை என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நேர்த்தியாக அந்த காலகட்டத்திற்கு ஏற்ப தேர்வு செய்து உருவாக்க வேண்டும். அதை இயக்குநர் சரியாக கையாண்டுள்ளார். ஷான் ரோல்டன் பின்னணி இசையும் பாடல்களும் மிக சிறப்பு.

விடுதலைக்கு முன்பு 1947ஆம் ஆண்டில் கதை நடப்பதைப் போன்று அமைக்கப்பட்டுள்ள படத்தின் காட்சிகள், இந்தியா சுதந்திரம் வாங்கிய காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

படத்தின் முதல் பாதி அடுத்து என்ன நடக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தும். இரண்டாம் பாதி நம்மை சுதந்திர போராட்ட காலத்திற்கு அழைத்து செல்லும். ஆனால் இரண்டாம் பாதியில் இதுதான் நடக்கும் என யூகிக்க வைக்கும் சில காட்சிகளும் இருக்கும். படத்தில் சில குறைகள் இருந்தாலும் அதை எல்லாம் தவிர்த்து விட்டால் பார்த்தால் முதல் படத்திலேயே அதிலும் ஒரு வரலாற்று படத்தை மிக சிறப்பாக இயக்குநர் பொன்குமார் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.