அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அரசியலிலிருந்தே ஒதுங்குவதாக சசிகலா நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும் எனக் கூறியுள்ளார். பொது எதிரியான திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ள நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை 10 மணிக்கு சென்னை அடையாறில் அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நிலைப்பாடு குறித்து அவர் முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.







