அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் பணம் மோசடி செய்த நபர்கள் வெளிநாடு தப்பிச் சென்றால் இண்டர்போல் போலீஸ் உதவியுடன் அவர்களை பிடிக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
டி.ஜி.பி சைலேந்திர பாபு தலமையில் இன்று (21.022023) பொருளாதார குற்றப் பிரிவின் ஆய்வு கூட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரித்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளிடம் வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, முக்கிய மோசடி வழக்குகளான 1 ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனி, 2 எல்.என்.எஸ் இண்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீசஸ் (LNS-IFS), 3. ஹிஜாவு அசோசியேட்ஸ் (HIJAU) மற்றும் 4. எல்பின் (ELFIN) ஆகிய நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கை முதலீட்டாளர்களுக்கு பணம் விரைவாக திரும்பக் கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஒவ்வொரு வழக்காக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.குறிப்பாக, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு சிகப்பு அட்டை நோட்டிஸ் (Red Corner Notice) சர்வதேச போலீஸ் (Interpol} உதவியுடன் பெற்று அவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்தியாவில் தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கவும் உத்திரவிடப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவின் காவல்துறை தலைவர் திருமதி, ஆசியம்மாள், இ.கா.ய, காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







