அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர்ப்பின்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்கு உட்பட்ட அகஸ்தியமலை யானைகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய, உயிர்ப்பின்னை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், 150 உள்ளூர் தாவரங்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட தாவரங்களின் தாயகமாகும். இந்த நிலப்பரப்பிலிருந்து 14 ஆறுகள் தோன்றுவதால் இப்புலிகள் காப்பகம் நதிகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் தென்மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதியில் உள்ள ஆசிய யானைகளின் மிக முக்கியமான வாழ்விடங்கள் மற்றும் நடைபாதைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் அகஸ்தியமலை யானைகள் காப்பகம் இந்த அரசால் சமீபத்தில் அறிவிக்கப்ட்டது. இந்த பாதுகாப்பு மையம் அகஸ்தியமலை யானைகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றை பாதுகாக்கும் அரசின் முயற்சியில் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.








