மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் தமக்கும் இடையே அதிகாரப்போட்டி எதுவும் இல்லை எனவும் தங்களது ஆட்சி தனது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் எனவும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால், ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவும் பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று நம்பிக்கை வாக்கு கோரினார். அவருக்கு ஆதரவாக 164 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து 99 எம்.எல்.ஏக்களே வாக்களித்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்.எல்.ஏக்களே தேவை, ஆனால் அதைவிட கூடுதலாக 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அமோக வெற்றி பெற்றார். நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில்கூட எதிர்க்கட்சிகள் தரப்புக்கு 107 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தன. ஆனால் இன்று 99 எம்.எல்.ஏக்களின் ஆதரவையே பால்தாக்ரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் இணைந்து பெற்றன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் அவையில் பேசிய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், தமக்கும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் இடையே அதிகாரப்போட்டி இருப்பதாக எழும் விமர்சனங்களை மறுத்தார். தங்கள் இருவருக்கும் இடையே துளியும் அதிகாரப்போட்டி கிடையாது எனக் கூறிய தேவேந்திர பட்நாவிஸ், தமது கட்சியான பாஜக தலைமை உத்தரவிட்டால் தாம் வீட்டில் உட்கார்ந்திருக்கக் கூட தயார் எனக் கூறினார். அந்த கட்சிதான் தம்மை முன்பு முதலமைச்சர் ஆக்கியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். தங்களது அரசு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் தேவேந்திர பட்நாவிஸ் நம்பிக்கை தெரிவித்தார். அமலாக்கப் பிரிவை (ENOFRCEMENT DIRECTORATE) சுட்டிக்காட்டி மிரட்டி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை அடிபணிய வைத்தாக குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அந்த விமர்சனத்தை சுட்டிக்காட்டும் வகையில் சட்டப்பேரவையில் “ED அரசு” “ED அரசு”என திரும்ப திரும்ப கோஷிமிட்டனர். இதற்கு பதிலடி கொடுத்து பேசிய, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், தங்களது அரசு ED அரசுதான். ஆனால் ED என்பது EKNATH SHINDE- DEVENDRA FADNAVIS-ஐ குறிக்கும் என்றார்.







