கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கேப்டன் ரோஹித் சர்மா, இங்கிலாந்து அணியுடனான டி20 போட்டியை முன்னிட்டு வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ளது. முதலாவதாக கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், இங்கிலாந்து சென்ற உடன் எடுக்கப்பட்ட சோதனையில் ரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ரோஹித் ஓய்வுக்குச் சென்றார். டெஸ்ட் அணிக்கு பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதேபோல, டி20 பயிற்சி போட்டிகளுக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். டி20 போட்டிகள் நெருங்கும் நிலையில், ரோஹித் கொரோனாவில் இருந்து மீண்டு வருவாரா.. ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கும் மாற்று கேப்டனை அறிவிக்க வேண்டுமா என்று சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் ரோஹித் சர்மாவுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளது. மருத்துவர்களும் அவர் உடல்நிலையை சோதித்த நிலையில், தற்போது ரோஹித் தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியே வந்துள்ளார். டி20 போட்டிகளில் கலந்துகொள்ளும் விதமாக, தற்போது ரோஹித் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து – இந்தியா இடையே முதல் டி20 போட்டி வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ரோஹித் இங்கிலாந்து உள்ளூர் அணியுடனான பயிற்சி போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-ம.பவித்ரா








