மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றதன் பின்னணி குறித்து தேவேந்திர பட்னவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னவிஸ். 2019ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜக – சிவ சேனா கூட்டணி அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும், இரண்டரை ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியை சிவ சேனா கேட்டதால் அந்த கூட்டணி அப்போது ஆட்சி அமைக்கவில்லை.
எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு 2019, நவம்பர் 23ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார் பட்னவிஸ். எனினும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்த அரசியல் வியூகம் காரணமாக மூன்றே நாட்களில் பதவிவிலகினார்.
இந்நிலையில், சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவுடன் இணைந்து பாஜக அமைத்துள்ள கூட்டணி அரசில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் தேவேந்திர பட்னவிஸ்.
இந்நிலையில் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கேட்டிருந்தால் மீண்டும் மகாராஷ்டிர முதலமைச்சராகி இருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், கொள்கை காரணமாகவே சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக தங்கள் கட்சி ஆக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சர் பொறுப்புக்கு முன்மொழிந்தது தான்தான் என தெரிவித்துள்ள பட்னவிஸ், எனினும், ஆட்சியில் பொறுப்பு ஏதும் வகிக்க வேண்டாம் என தான் எண்ணி இருந்ததாகக் கூறினார்.
அரசில் நீங்கள் இல்லாவிட்டால் அது இயங்காது என்று கூறி கட்சியின் மூத்த தலைவர் கேட்டுக்கொண்டதால், கட்சியின் கட்டளையை ஏற்று துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதாக தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.









