முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

தேர்தல் ஜனநாயகத்தில் வளர்ச்சி மாடல் அரசியல்


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சிகள் தொடர்ந்து உச்சரிக்கும் ஒரு வார்த்தையாக மாறிப்போய் உள்ளது அந்த சொல்… தேர்தல் அறிக்கைகள் தொடங்கி, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் என அரசியல்வாதிகள் தலைமை தாங்கும் எந்த மேடையிலும் மிக எளிதாக முனுமுனுக்க கூடிய ஒன்றாக அந்த வார்த்தை உள்ளது. அரசியல் குழுக்கள், பதவியில் இருக்கும் கட்சிகள் அல்லது எதிர்க்கட்சிகள். தங்கள் கூற்றுகள், எதிர் உரிமைகோரல்கள், பாராட்டு மற்றும் விமர்சனங்களுக்கு ஊன்றுகோலாக அடிக்கடி இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். அரசியல்வாதிகளின் நாக்கில் நர்த்தனம் ஆடி, தேன் போல் வெளி வந்து மக்களை அண்மைக்காலமாக வசீகரிக்கும் அந்த வார்த்தைக்குப் பெயர் ’வளர்ச்சி’

அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ச்சி மாடல்:
இந்த வளர்ச்சி என்ற வார்த்தை குஜராத் தேர்தல் களத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பருச்சில் பகுதியில் பேரணியில் பங்கேற்றார். அதில், பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்து முழங்கும் குஜராத் வளர்ச்சி மாடலை கடுமையாக விமர்சித்தார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளன. குஜராத்தில், அடிப்படை தேவையான தரமான கல்வியையும், சுகாதார கட்டமைப்பையும் பிரதமர் மோடி கொடுக்கவில்லை. இதைத் தான் குஜராத் மாடலா என்று மோடியின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்தார். டெல்லியை வந்து பாருங்கள், அங்கு உயர்தர சமத்துவமான பள்ளி அமைப்புகள் மற்றும் திறமையான மருத்துவ முறையை உருவாக்கி காட்டியுள்ளோம் என்று பெருமைபட கூறினார். அதாவது, குஜராத் பயணத்தின் போது குஜராத் மாடலை தனது டெல்லி மாடலோடு ஒப்பிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடி பேசும் வளர்ச்சி மாடல் :
கெஜ்ரிவாலின் பேரணிக்கு சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தின் வளர்ச்சியடையாத பழங்குடிப் பகுதிகளான தாஹோத் மற்றும் பஞ்ச்மஹால் ஆகிய பகுதிகளில் சுமார் 22,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நீர் வழங்கல் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த வளர்ச்சி அரசியலை பாஜக பிரதானப்படுத்தி பேச உள்ளது. அதாவது, கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்யும் பாஜக, அங்கு மோடியின் தொலைநோக்கு திட்டங்களால் பல்வேறு வளர்ச்சியை மேற்கொண்டு உள்ளதாக பேசி வருகிறது. முதலமைச்சராக இருந்த போது சுற்றுலாத்துறை, தொழில் துறையை மோடி மேம்படுத்தியதாக திண்ணைப்பிரச்சாரமும் முதல் பல்வேறு மட்டங்களில் பேசி வருகிறது.
பிரதமர் ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாய் யோஜனா, எம்ஜிஎன்ஆர்இஜிஏ மற்றும் முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் போன்ற பல்வேறு தேசிய உதவித் திட்டங்கள் போன்ற பல்வேறு அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டங்களை குஜராத் திறம்பட செயல்படுத்தியுள்ளது. இந்த சமூக ஆதரவுத் திட்டங்களின் மூலம், குஜராத்தின் கிராமப்புறப் பகுதியில், கட்சிக்கு ஆதரவாக தீவிரமாகச் செயல்படும் பயனாளிகளின் ஒரு பெரிய குழுவை பாஜக உருவாக்கியுள்ளது. பாஜக கூறும் இந்த வளர்ச்சி மாடல் அரசியலைத்தான் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் வளர்ச்சி அரசியல்:

2021 சட்டமன்ற தேர்தலிலேயே வளர்ச்சி அரசியல் என்ற பிரச்சாரம் தமிழ்நாடு தேர்தல் களத்தில் கடுமையாக எதிரொலித்தது. எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் தனது நான்கு ஆண்டு கால ஆட்சியில் மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு பேசி வந்தார். அதனை கடுமையாக விமர்சித்த மு.க. ஸ்டாலின் தற்போது தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்த போது திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டி செய்த வளர்ச்சியை பட்டியலிட்டு சட்டமன்றத்திலேயே உரையாற்றினார். திமுகவின் ஓராண்டு சாதனை திராவிட மாடல் அரசியல் என்று அவர் பேசும் வளர்ச்சி திட்ட அரசியலும் ஒரு வகையில் தேர்தல் ஜனநாயகத்தை நம்பும் கட்சிகள் பிரதானப்படுத்தும் வளர்ச்சி கோட்பாட்டு அரசியலாகவே உள்ளது.

வளர்ச்சி மாடலுக்கு உரிமை கோரல்:
சட்டமன்றத்திலும் திராவிட மாடல் என்ற வார்த்தை வளர்ச்சி என்பதன் அர்த்தமாகவே அரசியல் படுத்தி பேசப்படுகிறது. அதாவது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேச, திராவிட மாடலே ஒருவகையில் இந்திய மாடலின் ஒர் அங்கம் தான் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசினார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியாக பார்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கேற்ப, தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பாஜக தனது ஒத்துழைப்பைத் தருவதாகவும், அதை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பாஜக எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
திராவிட மாடல் என்றால் அது தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உள்ளடக்கியது தான் என்றும், திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம் தான் என்றும் கூறினார்.
குஜராத் மாடலை மையமாக வைத்து டெல்லி மாடல் – குஜராத் மாடல் ஒப்பீட்டு அரசியல் வட இந்தியாவில் நடக்கிறது. அதே அரசியலைத் தான் தென் இந்தியாவில் திராவிட மாடல் இந்திய மாடல் என்ற கோணத்தில் நகர்த்தி செல்கிறார்கள். குஜராத் மாடல், டெல்லி மாடல், தமிழ்நாடு மாடல் எல்லாமே மாநில உரிமைகள், தன் எழுச்சியின் வடிவமாகவே இருக்கிறது. அதனை தேசிய அரசியலின் ஒரு அங்கமாக்கும் முயற்சிகளும் நடப்பதை புரிந்து கொள்ளலாம்.

வளர்ச்சி மாடல் சமூக வளர்ச்சிக்கு உதவியதா?
அரசியல் கட்சிகள் முன்வைக்கும் வளர்ச்சி மாடல் என்பது தொழில் வளர்ச்சியை மையமாக வைத்தே கட்டமைக்கப்படுகிறது. அதாவது, குஜராத் மாடல் என்பது முழுக்க முழுக்க தொழில் வளர்ச்சியை கொண்டுள்ளது. அங்கு, கிராமப்புற வேலைவாய்ப்பு கடுமையாக சரிந்துள்ளது. பெண்கள் உயர்பதவிக்கு வருவதும் கடுமையாக சரிந்துள்ளது. மதரீதியாக மனிதர்களை பிரித்து பார்க்கும் மனநிலையும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மாடலில் இந்த காரணிங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உடலின் எல்லா பாகங்களும் சேர்ந்து வளர்வது தான் வளர்ச்சி அதை நோக்கி நகர்வது தான் ஒரு அரசிற்கு உண்மையான கனவு. அரசியல் கடந்து அந்த கனவை கட்சிகள் அடைந்தால் நல்லதே.

Advertisement:
SHARE

Related posts

கண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

Janani

உலக சிஇஓ பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மார்க் ஸ்க்கர்பர்க்கு!

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல்.

Halley Karthik