நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக்கை இயக்க ஆசை உள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயர்க்கு சொந்தகாரர் சங்கர். தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் பல பிரம்மாண்டங்களை காட்டி தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் 1993 இல் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் அவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
சங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து வந்தார். அப்போது ஷங்கரிடம் பயோபிக் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “இதுவரையில் அந்த மாதிரி ஒரு ஐடியா இல்லை. ஒரு வேலை அப்படி எடுப்பதாக இருந்தால் நடிகர் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நீங்கள் கேட்டவுடன் ரஜினி தான் என் நினைவுக்கு வந்தார். நானே இப்படி சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை” என்று பதிலளித்துள்ளார். இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து எடுத்த சிவாஜி, எந்திரன், எந்திரன் 2.0 ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.








