விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் – #DeputyCM உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின்…

Deputy Chief Minister Udayanidhi Stalin has said that I will respond to the criticisms leveled at me through my activities.

என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனிடையே, கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்” என கோரிக்கை வைத்தார்.

பின்னர், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்” என்று அமைச்சரவை மாற்றம் குறித்தும், உதயநிதியின் துணை முதல்வர் பதவி குறித்தும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய மாற்றங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி தற்போது வகிக்கும் துறையுடன் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தும் துறையை சேர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..

” துணை முதலமைச்சர் என்பது ஒரு பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். மக்களுக்காக உழைக்க இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். முதலமைச்சர், மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.