சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள் ளார்.
வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்கு வதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதிதாக நிலவியதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் கனமழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். சென்னைக்கு தென் கிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்ததும், பிற்பகலுக்கு மேல் மழையின் அளவு குறைந்து விடும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.








