சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அணி வகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி இந்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.








