புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ஒருவர் திடீரென ஜல்லிக்கட்டு திடலில், தனது காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்த முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால், இன்று நடக்க இருந்து ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக அரசு இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து அரசு இதழில் வெளியிட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜல்லிக்கட்டுக்கு தடைவித்து, வேறு தேதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் தச்சங்குருச்சியில், வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்தவர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஏராளமாக கூடியதால், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக காளையை அழைத்து வந்த ஒருவர் திடீரென்று யாரும் எதிர்பார்காத நேரத்தில் ஜல்லிக்கட்டு திடலுக்கு தனது காளையை எடுத்து வந்து ஆவேசத்துடன் அவிழ்த்து விட,அவரது காளை சீறி பாய்ந்து சென்றது.
இந்த செயல் அங்கிருந்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இதை பார்த்த காவல்துறையினர் உடனடியாக ஜல்லிக்கட்டு திடலுக்குள் யாரும் செல்ல முடியாதபடி தடுப்பணைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.