மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
இந்த கலவரத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை தடுக்க முயன்ற அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவர் மனதிலும் ஆறாத வடுவாய் மாறியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய இந்த கொடும் சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், மாதர் சங்கத்தினர், மற்றும் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக பலவிதமான போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் மீது வன்கொடுமை சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் 1000த்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பாஜக அரசு பதவி விலக வேண்டும், மணிப்பூர் கலவரத்தை ஏற்படுத்தி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.







