தமிழக ஆளுநரை திரும்பப்பெற அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்று என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், ஏற்கனவே நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தின்போது
மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர கைவண்டியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுதான் மக்கள் சந்திப்பின் பலன். நான் மக்களை சந்திக்கும் போதுதான் சின்ன சின்ன உதவிகளை என்னால் செய்ய முடிகின்றது. செய்தும் வருகின்றேன். ஏன் மக்களை சந்திக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்பவர்களுக்கான பதில் இது.
மக்களுடைய கோரிக்கைகளை இயன்ற அளவு விரைவாக நிறைவேற்றி வருகிறோம். மக்கள் சந்திப்பு என்பது அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படுவது அல்ல. மக்களுடைய நலனுக்காகவும், அவசியத்திற்காகவும் நடத்தப்பட்டு வருகிறது. விஷ ஜந்துக்கள் கடிப்பதற்கு வாய்ப்பிருப்பதால், மழைக்காலங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதன்மூலம் நோய் பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியும்.
நல்லதை ஆளுநர் பேசக்கூடாது, செய்யக்கூடாது, மக்களோடு ஆளுநர் தொடர்பே வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவதை நான் எதிர்க்கிறேன். தமிழக ஆளுநரை திரும்பப்பெற அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது, அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.







