ஹரியானாவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் டெல்லியிலுள்ள யமுனை ஆறு முழுவதுமாக நிரம்பி அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக அம்மாநில பேரிடர் மீட்புத் துறை அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில், பருவமழை தற்போது தீவிரமடைந்து டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது.
தலைநகரான டெல்லியில் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி 17 செ.மீ. மழை பதிவானது. அதன் பிறகு நேற்று ஒரே நாளில் 15.3 செ.மீ. மழை பெய்துள்ளது. 41 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.
தொடர் மழை பெய்து வருவதால் யமுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி யமுனா நதியில் அபாயகட்டமான 205.33 மீட்டர் உயரத்தை எட்டியதாக அம்மாநில பேரிடர் மீட்புத் துறை அறிவித்துள்ளது. டெல்லி பழைய ரயில்வே பாலத்தில் 205.4 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஹரியானா ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீரை தொடர்ந்து திறந்துவிடுவதால், யமுனை ஆற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹரியாணாவிலிருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இது தொடர்பாக பேசிய டெல்லி அமைச்சர் செளரப் பரத்வாஜ், மழை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.







