முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை பாஜக மாநில தலைவர்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கள்ள சாராய உயிரிழப்புகள் குறித்தும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரி புகார் மனு அளித்தார்.

 ஜூன் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பாஜக குழு சந்தித்து அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழுவில் கரு நாகராஜன், வி பி துரைசாமி, பொன்.பாலகணபதி, கார்த்திகாயணி, உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து,  அறிக்கை அளிக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..

“  மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல, தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வகுத்துள்ளது.

இது குறித்த  அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
இது தொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் அவர்கள் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

ஆகவே தாங்கள், வருகின்ற ஜூலை 11ந் தேதி முதல் 13ந் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்பிற்கு ஒதுக்கி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களது மேலான பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.