டெல்லி : சட்டப்பேரவையில் இரவு முழுவதும் நீடித்த எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

டெல்லி துணை நிலை ஆளுநரை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.   டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி…

டெல்லி துணை நிலை ஆளுநரை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

 

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாஜக ஆகிய இரு கட்சிகளும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவராக இருந்தபோது டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ரூ.1,400 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகளை மாற்றுமாறு தனது ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இந்த குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று டெல்லி சட்டமன்ற வளாகத்தில் அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் தர்ணா போராட்டம் நீடித்தது. அதேநேரத்தில், ஆம் ஆத்மி கட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

டெல்லி கலால் கொள்கை 2021-22 அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் சிபிஐ விசாரணைக்கு விகே சக்சேனா சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தார். நகர ஆட்சிப் பணியில் அவர் தலையிடுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மகாத்மா காந்தி சிலை அருகே அமர்ந்த நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் பகத் சிங், ராஜ் குரு, சுக்தேவ் ஆகியோரின் சிலைகள் அருகே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாடல்கள் பாடியும், முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் இருந்தனர். இரவு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.