நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தியிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி, அடுத்த மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வர உள்ளதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் நாடாளுமன்ற அலுவல்களில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வருகை தந்தார்.
அப்போது அங்கு அமர்ந்திருந்த சோனியா காந்தியிடம் சென்று அவரது உடல் நலம்
குறித்து விசாரித்தார்.
தான் நலமுடன் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி பதிலளித்தார். சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் திரும்பும் போது அவசர அவசரமாக மத்தியப் பிரதேசத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது அது குறித்தும் பிரதமர் கேட்டறிந்ததாக தகவல்கள் கூறப்படுகின்றது.







