கடந்த ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் வழக்கில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலும், மனீஷ் சிசோடியாவும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையையும் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவிப்பதாக இன்று காலை டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்து பேசிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கை தொடரவோ அல்லது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவோ தேவையான அடிப்படை ஆதாரங்கள் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் சதித்திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார் என்பதை உறுதிப்படுத்த வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை. சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஊகங்களின் அடிப்படையிலேயே உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கடந்த சில ஆண்டுகளாக, டெல்லி கலால் கொள்கை வழக்கில் பாஜக எங்கள் மீது குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் இன்று நீதிமன்றம் எங்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.
உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சதி செய்து கட்சியின் ஐந்து பெரிய தலைவர்களைக் கைது செய்தனர். ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு ஊடகத்திலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். கெஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல, நான் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன். கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சி நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் இன்று கூறியுள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.







