மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலபரீட்சையில் ஈடுபட்டது. இந்த போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் 3.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா 41 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து வந்த அன்மோல்பிரீத் சிங், குல்தீப் யாதவின் பந்து வீச்சில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஒருபுறம் இஷான் கிஷன் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதே வேளையில், மறுபுறம் பொலார்ட், வர்மா, டேவிட் ஆகியோர் பெரிதும் ஜொலிக்காமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 48 பந்துகளுக்கு 81 ரன்களை குவித்தார். டெல்லி அணி சார்பில் குல்தீப் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது இன்னிங்சை தொடர்ந்த டெல்லி அணி, தொடக்க வீரர்களாக பிரிதிவி ஷா மற்றும் டிம் சீஃபர்ட் களமிறக்கியது. இதில், டிம் சீஃபர்ட் 14 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மேலும், டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பண்ட் 1 ரன்னில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
தொடர்ந்து வந்த ரோவ்மேன் பவல் மற்றும் மந்தீப் சிங் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியதால் ரசிகர்கள் தங்களது நம்பிக்கையை இழந்தனர். ஆட்டத்தின் முதலிருந்து அணியை தாங்கிப்பிடித்த பிரித்திவி ஷாவும் 9வது ஓவரில் 38 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த வீரர்களும் ஆட்டமிழக்க, லலீத் மற்றும் அக்ஷர் படேல் இணைந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இதன் மூலம் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. லலீத் 48 ரன்களையும், அக்ஷர் படேல் 38 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.










