பவானி பாசன விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்காமல் 10 மாதங்களாக தாமதமாகும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிடும் அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள, பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதம். இயற்கை பேரிடர், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சலின்றி, இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
பவானிசாகர் அணையில் நீர்ப்பற்றாக்குறை காரணமாக, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய்களில், ஏப்ரல் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6,300 ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. கோபி வேளாண்மை வட்டத்தில் 1,500க்கும் அதிகமான விவசாயிகளும், தூ.நா.பாளையம் வோண்மை வட்டத்தில் 1,000-க்கும் அதிகமான விவசாயிகளும், உதவி வேளாண்மை அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளதாக தடப்பள்ளி – அரக்கன்கோட்டை – பவானி நதி பாசன விவசாகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையான சுமார் 3 கோடி ரூபாய் 10 மாதங்களுக்கு முன்பே அந்தந்த தொடக்க வேளாண்மை சங்கங்களுக்கு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களால் அனுப்பப்பட்டுவிட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் சில விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது. மத்திய அரசால் அனுப்பப்பட்ட தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் வேளாண்மை துறையிடம் இருப்பதாக, பவானி பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் இல்லை என்று அவர்கள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பணத்தை அனுப்பியும், விவசாயிகளுக்கு வழங்காமல் 10 மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தாமதமின்றி, உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








