ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக கர்நாடக மாநிலச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும், அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்த வா.புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த 2021 ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தனர். அதை எதிர்த்து புகழேந்தி சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கட்சிக்கு எதிராக செயல்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரை கட்சியில் இருந்து நீக்கவும் கட்சித் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளது என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இந்த வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து புகழேந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூடுதல் ஆவணங்களோ, சில திருத்தங்களோ செய்ய வேண்டியுள்ளதன் காரணமாக மனுவானது “டிபக்ட் லிஸ்ட்டில்” உள்ளது.
-ம.பவித்ரா








