அக்னிபாத் திட்டத்தில் சேர குவியும் விண்ணப்பங்கள்!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமான படையில் சேர இதுவரை 94,281 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கிலும் ராணுவத்தை…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமான படையில் சேர இதுவரை 94,281 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கிலும் ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் “அக்னிபாத்” என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தால் ராணுவப் பணியில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வடமாநிலங்களில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எனினும், மத்திய அரசு இத்திட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெற்று பணிபுரிபவர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானபடையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. விமானப்படையில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம், அன்று காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில், ராணுவ அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில சேர 94,281 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 5-ந் தேதி  வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.