மதபோதகர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நாகர்கோவில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் அவரது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோ, அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அதில் ”வெளிநாட்டு மத கலாச்சாரம் இது தான்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது சம்பந்தமாக திமுக ஐ.டி., பிரிவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 10-ம் தேதி கனல் கண்ணன், நாகர்கோவில் சைபர்கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவரது தரப்பு சார்பில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முறையீடு செய்யப்பட்டது.
அதற்காக கனல் கண்ணனை பாளையங்கோட்டை சிறையில் இருந்து சைபர்கிரைம் போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அவரது ஜாமீன் முறையீடு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 30 நாட்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இரு வேளை கையெழுத்திட கூறி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார். அவர் நீதிமன்றம் அழைத்து வந்ததை தொடர்ந்து பா.ஜ.க., வினர் மற்றும் இந்து முன்னணியினர் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.







