மகளிர் பிரீமியர் லீக் | குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. தொடர்ந்து, எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியின் கவுதமி அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். குஜராத் அணி தரப்பில் அந்த அணியின் கேஷ்வி, கார்ட்னெர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆஷ்லீ கார்ட்னர் 54 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 61 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக பெங்களூரு, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.