ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்துக்கு முன்பாக நிறைவுபெறும். அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் 17-வது நாடாளுமன்றத்தின் 12-வது (மழைக்காலக் கூட்டம்) அமா்வு நாளை தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் கூட்டத்தொடா் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 17 அமா்வுகளுக்கான இந்த கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற மொத்தம் 28 மசோதாக்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. இதில் 21 மசோதாக்கள் இரு அவையிலும் புதிதாத அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:
ராஜ் நாத் சிங் தலைமையில் கூட்டம் நடந்தது, இதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதித்தோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், வேண்டுமென்றே அரசியல் சாசன விதிகளை மீறி அரசின் செயல்பாடுகளில் தலையிடும் தமிழ்நாடு ஆளுநரை நீக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும். அதனால் மக்களவை அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வை குறித்து விவாதிக்கவும் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.