கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆதார் அவசியம்!! தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இந்த நிலையில் பயனாளிகளை தேர்வு செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகளுக்கு வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கனையும் விண்ணப்பங்களையும் கொடுப்பார்கள். அந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து டோக்கனில் உள்ள தேதியில் நேரத்தில் ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை மாவட்ட ஆட்சியர்கள் குழு ஆய்வு செய்து பயனாளிகளை கண்டறியும். இந்த திட்டத்திற்கு கைவிரல் ரேகை அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த மகளிர் உரிமை தொகை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சென்னையில் நாளை முதல் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான டோக்கனும் விண்ணப்பமும் வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளில் 3400 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

விண்ணப்பம், டோக்கன் உள்ளிட்டவற்றை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். இரண்டு கட்டமாக மொத்தம் 1428 ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படும். நியாய விலை கடைகள் முன்பு டோக்கன் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்படும். அது போல் வங்கிக் கணக்கு இல்லாத பெண்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உதவித் தொகை தொடர்பாக பொதுமக்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம். பொய் தகவல்களையும் நம்ப வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆதார் எண் உள்ளவர்கள் மற்றும் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்க முடியும். ஆதார் எண் இல்லாதவர்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தில், ஆதார் எண் பெறுவதுக்கான விண்ணப்பங்களை சமர்பித்து ஆதார் எண் பெற வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பெரிய அளவில் விழிப்புணர்வு மற்றும் விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.