பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உலகளவில் பிரபலமான டைம் இதழின் அட்டைப்படத்தில் இடம்பிடித்துள்ள நிகழ்வு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம் பத்திரிக்கை, உலகின் தலை சிறந்தவைகளில் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த பத்திரிகையில் வெளிவரும் செய்திகளில் ஒரு நபர் இடம் பெற்றிருந்தால் அது மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. அப்படியிருக்க இந்த இதழின் அட்டைப் படத்திலேயே இடம்பிடித்து, ‘உலகளாவிய நட்சத்திரங்கள்’ வரிசையில் தற்போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இணைந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே இந்தியாவை பொறுத்தவரை காந்தி, நேரு, இந்திராகாந்தி, மன்மோகன்சிங், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி போன்ற அரசியல் தலைவர்கள் உட்பட லக்ஷ்மி மிட்டல், சச்சின் டெண்டுல்கர், நடிகை பர்வீன் பாபி, ஐஸ்வர்யா ராய் பச்சன், அமீர்கான் போன்ற பிற துறையை சார்ந்த பிரபலங்களும் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பிடித்திருந்த நிலையில், இவர்கள் வரிசையில் தற்போது தீபிகா படுகோனேவும் இடம் பெற்றுள்ளார்.
பாலிவுட்டில் அவர் செய்த பங்களிப்புகளுக்காகவும், மேலும் தனது பணியின் மூலம் உலகத்தை பாலிவுட்டுக்கு கொண்டு சென்றதற்காகவும் அவருக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டில், இதே டைம் பத்திரிகையால் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்நிகழ்வு மேலும் அவருக்கு பெருமையை பெற்று தந்துள்ளது. இதுதவிர பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த உரையாடலில் தீபிகா படுகோனே பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டதோடு, தன் மனதில் பட்டதை வெளிப்படையாகவும் பேசியிருந்தார். அந்தவகையில், தீபிகா தனக்கு எதிரான அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசும்போது, “நான் அதைப் பற்றி ஏதாவது சிந்திக்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், நான் அதைப் பற்றி எதுவும் பெரிதாக சிந்திப்பதே இல்லை” என தெரிவித்துள்ளார் .
முன்னதாக, தீபிகா நடித்த பத்மாவதி திரைப்படம் வெளியான சமயத்தில் ஒரு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் குதித்த சம்பவம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி தீபிகா படுகோனே மாணவர்களை சந்தித்த சம்பவம் மற்றும் சமீபத்தில் பதான் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடலில் காவி நிற உடையணிந்து தீபிகா படுகோனே ஆடியதால் வெடித்த சர்ச்சை போன்ற பல்வேறு அரசியல் சார்ந்த விவகாரங்களுக்கு தற்போது தீபிகா பதிலளித்துள்ளதாக தெரிகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா