வில்வித்தைப் போட்டிக்கான உலக தரவரிசையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ரீகர்வ் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமாலிகா ஆகியோர் அடங்கிய அணி 5-1 என்ற செட் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
பின்னர் கலப்பு பிரிவில் தனது கணவர் அதானு தாஸூடன் பங்கேற்ற தீபிகா, நெதர்லாந்து ஜோடியை 5 -3 என்ற கணக்கில் வென்றார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான தனி நபர் பிரிவில் ரஷ்யாவின் எலினாவை 6- 0 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்திய தீபிகா குமாரி, 3வது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றிகளின் மூலம் உலக வில்வித்தை பெண்கள் தரவரிசையில் தீபிகா குமார் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள தீபிகா குமாரி, வில்வித்தையில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.







