மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு இருக்கும் போதிலும் வலுவான மசோதாவை நிறைவேற்றாமல் உள்ளது என நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மனித கடத்தலுக்கு எதிரான உலக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குனர் ரத்னா, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட கொத்தடிமை நலச் சங்கத்தினர், மனித கடத்தல் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
மாணவிகள் மத்தியில் விரல் நுனியில் இருந்து ஆபத்தை விளைவிக்கும் தொழில்நுட்ப பாதிப்புகள் குறித்தும் அதை பாதுகாப்பாக கையாள்வது எப்படி என்பதையும், குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அரசின் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில் மனித கடத்தல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விழாவில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்களுக்கு நேர திட்டமிடல் மிக முக்கிய என்றும் சமூகவலைதளங்களில் மூழ்கி போகாமல் சரியான திட்டமிடலோடு செயற்பட வேண்டும் என தெரிவித்தார். செய்திகள், நல்ல திரைப்படங்களை தேர்ந்தேடுத்து பாருங்கள். ஆனால் பெண்களை அடிமைகளாக தவறாக சித்தரிக்கும் நாடகங்களை தவிருங்கள் என்றார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாகவும் எனவே துறை சார்பாக கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., உலகளவில் மனித கடத்தல் நடைபெறுவதாகவும், மனித உறுப்பு திருட்டு, பாலியல் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபடுத்த மனித கடத்தல் இருப்பதாகவும், வளர்ந்த நாடுகளிலும் கொத்தடிமை முறை இருப்பதாகவும் தெரிவித்தார். இன்ஸ்டாகிராமில் எனக்கு லைக்ஸ் வரவில்லை என வருத்தப்படக்கூடிய காலகட்டமாக உள்ளது. இதற்கான அழுத்தம், விரயம், மன உளைச்சலை எல்லாம் குறைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பாஜக அரசாங்கத்தின் போக்கை கண்டுத்து தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறோம் எனவும், முதலமைச்சர் பிரதமரை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதற்காக பிரதமரும் கலந்துகொள்கிறார். அதற்கும், கட்சி கூட்டணிக்கும் முடிச்சுபோடுவது அர்த்தமில்லாதது என்றார்.








