நகர்ப்பற வீடு கட்டும் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சொந்த நிலத்தில் தனிநபர் கட்டும் தனி வீடு, பிறருடன் இணைந்து கட்டும் பிளாட் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதா என்றும் அது குறித்த விவரங்களை அளிக்குமாறும் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பிய கனிமொழி சோமு, கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது, எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கவுஷல் கிஷோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 11 ஆயிரத்து 257 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 8 ஆயிரத்து 509 கோடியே 54 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளைப் பொறுத்தவரை ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 9,279.55 கோடி என்றும் விடுவிக்கப்பட்ட நிதி ரூ.7,742.84 கோடி என்றும் அமைச்சர் கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 679 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 87 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








