சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. தொழில் அதிபரும், சினிமா இயக்குநருமான இவர், தாம் புதிதாக இயக்கவிருந்த திரைப்படத்திற்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வெற்றி துரைசாமியும் அவரின் உதவியாளருமான கோபிநாத் என்பவரும் காரில் சிம்லா நோக்கி சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் அவர்களது கார் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த மூவரில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் வெற்றி துரைசாமி குறித்த தகவல் மட்டும் அப்போது கிடைக்கவில்லை. உள்ளூர் மக்கள் உதவியோடு விபத்தில் காணாமல் போன வெற்றி துரைசாமியை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆழ்கடல் நீச்சல் வீரர்களை கொண்டு சட்லஜ் ஆற்றில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இருப்பினும் பாறை இடுக்குகளில் மூளை திசு கண்டெடுக்கப்பட்டது. வெற்றி பயன்படுத்திய சூட்கேஸ் மற்றும் செல்போனும் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், வெற்றியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அவரது தந்தை சைதை துரைசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து சட்லஜ் நதியில் டெமோ பொம்மையை வைத்தும் வெற்றியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காணாமல் போன வெற்றியை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 9 நாட்களாக தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படையினர், உள்ளூர் காவல்துறையினர், ஆழ்கடல்
நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 9 நாட்களாக வெற்றியை தீவிரமாக தேடி வந்த நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சட்லஜ் நதியில் பொவாரி என்ற இடத்திற்கு அருகே, ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் வெற்றியின் உடலை இன்று கண்டெடுத்தனர்.
இதையும் படியுங்கள் : திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது! – கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட வெற்றியின் உடல் அருகிலுள்ள சிம்லா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னைக்கு வெற்றியின் உடல் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மகனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
“இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயப்பூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







