குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக். 6-ம் தேதி வெளியிட்டது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 10 லட்சம் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளையே (நவ.6) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு 5 ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 8-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்). 2026-இற்கான அறிவிக்கை எண் 11/2026, நாள் 06.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாணை (நிலை) எண் 68, மனித வள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 30.10.2026 இல் அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு ஐந்து ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இத்தெரிவிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 08.11.2026 11.59 பி.ப. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.